அறிவுலகின் தந்தை என்றும் கிரேக்கத் தத்துவ ஞானி என்றும் போற்றப்படும் ‘அரிஸ்டாடில்’ (Aristotle) (கி.மு. 384 – 322) கூட மாதவிடாய் இரத்தத்தில் இருந்துதான் மனிதன் படைக்கப்பட்டான் என்று கூறிக் கொண்டிருந்தார். இந்திரியத்துளியில் ஒழிந்திருக்கும் ‘குட்டி மனிதன்’ தான் கருவறைக்குள் சென்று வளர்ந்து குழந்தையாக வெளியேறுகிறான் என்று ஒரு பிரிவினர் கூறிக் கொண்டிக்க, மற்றொரு பிரிவினரோ அந்த குட்டி மனிதன் ‘சினை முட்டையில்’தான் மறைந்திருக்கின்றான் என்றும் கூறிவந்தனர். 17ம் நூற்றாண்டுவரை கருவியல் கோட்பாடு இவ்வாறுதான் இருள் சூழ்ந்திருந்தது.
அறிவியல் கண்களை திறந்து விட அல்குர்ஆன் மகத்தான பங்காற்றியது. மனித உருவாக்கம் தொடர்பான அல்குர்ஆன் வசனங்கள் அறிவியல் உலகின் திருப்புமுனையாயின. அதில் குறிப்பாக ‘அலக்’ எனும் பதம் கருவியல் உலகில் பெரும் புரட்சியையே தோற்றுவித்தது.
கிருத்துவ மதத்தைச் சார்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் டாக்டர். கீத்மூர், டாக்டர். மாரீஸ் புகைல், டாக்டர். ஜோ. லே ஸிம்சன் போன்ற சிந்தனையாளர்களை ‘அல்குர்ஆன் அல்லாஹ்வின் அற்புத வேதம்!’ என்று கூற நிர்ப்பந்தித்தது.
கனடாவில் டொரண்டோ பல்கலைக்கழத்தில் (University of Toronto) உடற்கூறு துறைத் தலைவராகவும் கருவியல் துறை பேராசியராகவும் இருந்த டாக்டர். கீத் மூர் (Prof. Dr. Keith Moore) ‘அலக்’ எனும் ஒரு கட்டத்தை மனித கரு அடைகிறது என அல்குர்ஆன் கூறுவதை அறிந்து வியந்து போனார். உடனே விலங்கியல் துறைக்குச் சென்று அட்டைப் பூச்சியை எடுத்து வந்து மனித கருவுக்கு ஒப்பிட்டுக் காட்டினார். இரு போட்டோக்களையும் வெளியிட்டு அல்குர்ஆன் வாயிலாக தான் அறிந்த உண்மையை உலகுக்கு எல்லாம் தெரிவித்து மகிழ்ந்தார்.
அரபியரிடத்தில் ‘அலக்’ என்பதின் பொருள் உறைந்த இரத்தம் என்பதாகும் என்று அவரிடம் கூறப்பட்ட போது டாக்டர். கீத் மூர் திகைத்துவிட்டார். ‘குர்ஆனில் சொல்லப்பட்டது கருவின் வெளித் தோற்றத்திற்கான நுட்பமான வர்ணனையாக மட்டும் அல்ல! மாறாக கருவின் உட்புற உருவாகத்திற்கான தெளிவான வர்ணனையாகக் கூட இருக்கிறது. ஏனெனில்அலக் உடைய கட்டத்தில் நுட்பமான நாளங்களில் இரத்தமானது மூடப்பட்டதாக அமைந்திருக்கின்றது’ என்றார்.
கனடா நாட்டு நாளேடுகளின் தலைப்புச் செய்தியாகவே இது இடம்பெறலாயிற்று. அதில் ஒரு நாளேடு ‘பழங்காலப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஆச்சரியப்படத்தக்க செய்தி’ என்று தலைப்பிட்டிருந்தது.
மனித கண்களால் நேரடியாக காணமுடியாத அளவுக்கு கருவின் ஆரம்பத் தோற்றங்கள் மிக நுட்பமானவை. மைக்ரோஸ்கோப் (உருப் பெருக்கி சாதனம்) உதவியுடன்தான் ஒருவர் இவற்றை பார்க்க முடியும். கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு முன்புதான் இக்கருவி கண்டுபிடிக்கப்பட்டது.
கருவளர்ச்சி குறித்து நம் கண் முன்னே உள்ள சிலேடுகளும் ஃபிலிம் படங்களும் ஆகிய அனைத்துமே மைக்ரோஸ்கோப் உதவியுடன் படம் பிடிக்கப்பட்டவை. . . . 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு கரடு முரடான அறுவை சிகிச்சை செய்து கருவின் வளர்ச்சிப் படிகளை ஒருவர் காண முயன்றிருந்தால் கூட, அவற்றை அவரால் கண் கூடாக பார்த்திருக்க முடியாது என்றார் டாக்டர். கீத் மூர்.
கரு வளர்ச்சியின் படித்தரங்களின் விளக்கங்களை அல்லாஹ்வின் தூதர் அறிந்திருக்க வாய்ப்பிருந்திருக்கிறதா? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு சாத்தியமே இல்லை. ஏனென்றால் கரு படிப்படியாக உருவாக்கப்படுகிறது என்பதை அன்றைய முழு உலகமும் அறிந்திருக்கவில்லை என்றார்.
அதனைத் தொடர்ந்து அல்குர்ஆனிலும் நபிமொழியிலும் கருவியல் தொடர்பாக சுமார் 80 விஞ்ஞான உண்மைகளை திரட்டினார். தான் ஏற்கெனவே எழுதி வெளியிட்டிருந்த ‘கருவில் உருவாகும் மனிதன்’ (The Developing Human) எனும் நூலில் இத்தகவல்களை இணைத்து அதன் மூன்றாம் பதிப்பாக 1982ல் வெளியிட்டார். ‘மருத்துவத் துறையில் மிகச் சிறந்த நூல்’ என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்த அந்த நூல், கருவியல் துறையில் முக்கிய பாடநூலாக (Text Book) முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
1981ல் சவூதி அரேபியா, தம்மாமில் நடந்த ஏழாவது மருத்துவ மாநாட்டில் (Seventh Medical Conference) ‘அல்குர்ஆன் இறைவேதம்தான் என்பதற்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்பதற்கும் ‘அலக்’ ஒரு மகத்தான அத்தாட்சி’ என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அல்குர்ஆனின் அற்புதம் கண்டு இஸ்லாத்தின்பால் விரைந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகளை கிருத்துவ மதத்தில் தக்க வைப்பதற்காக கிருத்துவ உலகம் படாத பாடுபடுகிறது.
கிருத்துவப் பிரச்சாரகனும் இஸ்லாத்தின் எதிரியுமான ஜகரிய்யா பத்ருஜ் என்பவன் கிருத்துவ வேதங்களிலும்? ‘அலக்’ இருப்பதாக பொய்யாக வாதிட்டுக் கொண்டிருக்கின்றான்.
இந்நிலையில் ‘அலக்’ என்பதற்கு கலப்பு இந்திரியத்தைக் குறிக்கும் ‘கருவுற்ற சினை முட்டை’ என்ற சொல்லைப் பயன்படுத்தி விளக்கம் கொடுத்துள்ளார் தமிழகத்து மேதாவி(?) ஒருவர். இந்திரிய நிலையைத் தாண்டி, அலக் எனும் அடுத்த கட்டத்திற்கு வந்த கருவை மீண்டும் இந்திரிய நிலைக்கே கொண்டு சென்றுள்ளார். பிறகு அங்கிருந்து ‘அலகிற்கு’ அடுத்த நிலையான ‘முத்கா’ நிலைக்கு தாவி விடுகிறார். ஆக விஞ்ஞானிகளை வியப்புறவிக்கும் ‘அலக்’கின் எதார்த்தப் பொருளை அல்குர்ஆனில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளார். அல்குர்ஆனின் 96வது அத்தியாயத்தின் பெயரையும் ‘அலக்’ எனும் பதம் இடம்பெற்ற (22:5, 23:14, 40:67, 75:38, 96:2) அனைத்து ஆயத்களின் பொருள்களையும் மாற்றியுள்ளார். கிருத்துவ உலகை ஆட்டிப்படைக்கும் ‘அலக்’ எனும் சொல்லுக்கு மாற்றுப் பொருள் கொடுப்பதின் மூலம் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு தாரைவார்க்கும் ஈனச் செயல் அரங்கேற்றப்படுகிறதோ என்ற சந்தேகம்? பலருக்கு எழுந்துள்ளது. எனவே முஸ்லிம்கள் இவர்கள் கூறும் மார்க்க விஷயத்தில் கவனமாக இருப்பது மிக அவசியமாகும்.
சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது, அசத்தியம் அழிந்தே தீரும்! (அல்குர்ஆன் 17:81)