இஸ்ரேலர்கள் 72 கூட்டங்களாக பிரிந்தார்கள். எனக்குப் பின் என்னுடைய உம்மத்துக்கள் 73 கூட்டமாக பிரிவார்கள். அதில் ஒரு கூட்டத்தார் மாத்திரம் சுவர்க்கவாசிகள். மற்றைய 72 கூட்டத்தினரும் வழித்தவறியவர்களாவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியபோது, அண்மையில் இருந்த ஸஹாபாக்கள் " அல்லாஹ்வின் திருத்தூதரே! அந்த ஒரு கூட்டத்தினர் யார்? என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள்" எனக் கேட்க. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் " நானும், என்னுடைய ஸஹாபாக்களும் நடக்கின்ற வழியை பின்பற்றி நடப்பவர்கள் தான் அந்த கூட்டத்தினர்" எனக் கூறினார்கள். இந்த கூட்டத்தினரே ஸுன்னத் வல் ஜமாஅத் எனப்படுபவர்கள்.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியபடி. 73 கூட்டத்தில் ஸுன்னத் வல் ஜமாஅத் நீங்கலாக மற்ற 72 கூட்டத்தினரும் ஆரம்பத்தில் ஆறு பிரிவுகளை கொண்டவர்களாக இருந்தார்கள். இந்த ஆறில் ஒவ்வொன்றும் பன்னிரண்டு பிரிவுகளாக பிரிந்ததினால் அவர்கள் 72 கூட்டத்தினர்களாக ஆனார்கள். அந்த மத்ஹபுகளின் விளக்கமும், கொள்கைகளும் பின்வருமாறு: -
1. ராபிளிய்யா, 2. காரிஜிய்யா, 3. ஜபரிய்யா, 4. கதரிய்யா, 5. ஜுஹைமிய்யா, 6. மர்ஜிய்யா என்ற ஆறு பிரிவுகளாகும்.
ராபிளிய்யா, காரிஜிய்யா, ஜபரிய்யா என்ற இந்த மூன்று கூடத்தார்களும் பொதுவாக ஷீயா என்ற பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.
* ராபிளிய்யா என்ற பிரிவில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. அலவிய்யா 2. பதாஇய்யா 3. ஷீய்யா 4. இஸ்ஹாக்கியா 5. ஸெய்திய்யா 6. அப்பாஸிய்யா 7. இமாமிய்யா 8. நாவிஸிய்யா 9. முதனாசிகிய்யா 10. லாஇனிய்யா 11. ராஜிஇய்யா 12. முதராபிஸிய்யா எனப்படும்.
இவர்களின் கொள்கை:
தராவீஹ் தொழுகை ஸுன்னத் இல்லை, தொழுகைக்கு இமாம் ஜமாஅத் ஸுன்னத் இல்லை, வுழு செய்யும் போது தலையில் மஸ்ஹு செய்தல் ஜாயிஸ் இல்லை, அதோடு அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹுமா) இந்த மூன்று கலீபாக்களை பற்றி அவதூறு கூறுவார்கள். இவர்களுக்கிடையில் சில செயல்களில் வேறுபட்ட அபிப்பிராய பேதங்களும் உண்டு. அதாவது அலவியாக்கள் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை நபி என்று கூறுகிறார்கள். பதாஇய்யாக்கள் நபி பட்டத்தில் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும் பங்கு உண்டு என்கின்றனர்.
* காரிஜிய்யா என்ற இந்த மத்ஹபில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. அஸ்ரகிய்யா, 2. இபாளிய்யா, 3. ஸஃலபிய்யா, 4. ஹாஸிமிய்யா, 5. கலபிய்யா, 6. கூஸிய்யா, 7. கன்ஸிய்யா, 8. ஷிம்ராக்கிய்யா, 9. முஃதஸிய்யா, 10. மைமூனிய்யா, 11. மஹ்கமிய்யா, 12. அக்னஸிய்யா எனப்படும்.
இவர்களின் கொள்கை:
ஜமாஅத்து தொழுகை உண்மை இல்லை, கிப்லா உடையவர்கள் பாவத்தை கொண்டு காபிர் ஆவார்கள், அநீதி உடைய அரசனுக்கு விரோதம் செய்து விலகுவது நலம், இவர்களில் கன்ஸிய்யாக்கள் ஸகாத் ஃபர்ளு அல்ல என்றும் முஃதஸிய்யாக்கள் தீமையானது அல்லாஹ்வின் நாட்டத்தை கொண்டதல்ல என்றும் பாஸிகீன்களுக்கு பின்னால் தொழுவது ஆகுமானது அல்ல என்றும் கூறுவதோடு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஷபாஅத், அவ்லியாக்களின் கராமத் இவைகள் இல்லை என்று மறுக்கிறார்கள்.
* ஜபரிய்யா என்ற இந்த மத்ஹபில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. முளுதர்றிய்யா, 2. அப்ஆலிய்யா, 3. மஇய்யா, 4. மப்ரூகிய்யா, 5. நஜ்ஜாரிய்யா, 6. மைமனிய்யா, 7. கஸ்லிய்யா, 8. ஸாபிகிய்யா, 9. ஹபீபிய்யா, 10. கவ்பிய்யா, 11. ஹஸ்பிய்யா, 12. பிக்ரிய்யா எனப்படும்.
இவர்களின் கொள்கைகள்:
ஸதகா கொடுப்பது அவசியம் இல்லை இவர்களில் ஸாபிகிய்யாக்கள் வணக்கத்தை கொண்டு எந்த பிரயோசனமும் இல்லை பாவத்தை கொண்டு கெடுதியும் இல்லை என்றும் ஹஸ்பிய்யாக்கள் தவ்பாவையும், அல்லாஹ்வின் லிகாவையும் மறுக்கின்றார்கள்.
* கதரிய்யா என்ற இந்த மத்ஹபில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. அஹமதிய்யா, 2. ஸனவிய்யா, 3. ஷெய்த்தானிய்யா, 4. ஷரீகிய்யா, 5. வஹ்மிய்யா, 6. அபதிய்யா, 7. நாகிதிய்யா, 8. முதபர்ரிய்யா, 9. காஸிதிய்யா, 10. நிளாமிய்யா, 11. மும்தரிய்யா, 12. கைஸானிய்யா எனப்படும்.
இவர்களின் கொள்கைகள்:
நன்மையையும் தீமையும் உண்டாகிறது அல்லாஹ்வுடைய தக்தீரை கொண்டதல்ல, ஜனாஸா தொழுகை வாஜிப் அல்ல இவர்களில் அஹமதிய்யாக்கள் பர்லை ஒப்புக் கொண்டு ஸுன்னத்தை மறுக்கின்றார்கள். ஸனவிய்யாக்கள் நன்மைகளை படைக்க ஒரு இறைவனும், தீமைகளை படைக்க ஒரு இறைவனும் உண்டு என்றும், ஷெய்த்தானிய்யாக்கள் ஷெய்த்தான்கள் இல்லை என்றும் மறுக்கின்றார்கள்.
* ஜுஹைமிய்யா என்ற இந்த மத்ஹபில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. முஅத்தலிய்யா, 2. முராபிலிய்யா, 3. முதராகிபிய்யா, 4. வாரிதிய்யா, 5. ஹர்கிய்யா, 6. மக்லூக்கிய்யா, 7. கைரிய்யா, 8. பானிய்யா, 9. ஸனாதிகிய்யா, 10. லப்லிய்யா, 11.கப்ரிய்யா, 12. வாக்கிபிய்யா எனப்படும்.
இவர்களின் கொள்கைகள்:
ஈமான் கல்பி கொண்டதாக இருக்கும் நாவை கொண்டதல்ல, இஸ்ராயீல், முன்கர், நகீர் ஆகிய மலக்குமார்களையும், ஹவ்ஸுல் கவ்ஸர், ஸிராத்தல் முஸ்தகீம் பாலத்தையும் கேலி செய்வதாகும், இவர்களில் முஅத்தலிய்யாக்கள் அல்லாஹ்வின் அஸ்மா படைக்கப்பட்டது என்றும், கைரிய்யாக்கள் நமது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஒரு புத்திசாலியாக இருந்தார்களே தவிர ஒரு ரசூலாக இருக்கவில்லை என்று கூறுகின்றார்கள்.
* மர்ஜிய்யா என்ற இந்த மத்ஹபில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் :
1. தாரிகிய்யா, 2. ஷாஇய்யா, 3. ராஜிய்யா, 4. ஷாகிய்யா, 5. பைஹஷிய்யா, 6.அமலிய்யா, 7. மன்கூசிய்யா, 8. முஷ்தஸ்னிய்யா, 9. அப்தரிய்யா, 10. பிதய்யா, 11.முஷப்பிஹிய்யா, 12. ஹஷவிய்யா எனப்படும்.
இவர்களின் கொள்கைகள்:
ஈமானை தவிர வேறு ஒரு இபாதத்தும் பர்ளாக இல்லை இவர்களில் ஷாகிய்யாக்கள் ஈமானில் சந்தேகம் இருக்கின்றது என்றும், பைஹஷிய்யாக்கள் ஏவல் விலகல் அறியாதவன் காபிர் எனச்சி சொல்லுகின்றார்கள்.